Feb 2, 2011

சலனம்
நீர்மட்டத்தில்
மேல் நிற்கிறீர்கள்
தாமரை இலைகளில்
துளிகள் உருள்வதை
காண்கிறீர்கள்
......நீர்
உங்களையும் பிரதிபலிக்கிறது
மகிழ்கிறீர்கள் !
ஆழத்தில்
.................
வேர்கள் சிக்குண்டு
ஒரு மரணத்தை
சம்பவிக்க காத்துக்கொண்டிருக்கலாம்
வலை பின்னல்
கட்டுமரங்கள் ஆழ்கடலில் செல்வதில்லை
நாட்டுப்படகால் கடல் தாண்ட முடியாது
மீனவனை கொல்வதில் நீதியொன்றும் இல்லை
விசைப்படகால்,
லாபவெறியால்,
விளைந்தவைதான் எல்லாம்.
கடலாடுபவன் துயரம்
கரையாளன் அறிவதில்லை
காற்றை அழித்தோம்
கடலை அழித்தோம்
வனத்தை அழித்தோம்
நாமே அழிந்தோம் .

Jan 29, 2011

சலனம்

நீர்மட்டத்தில்
மேல் நிற்கிறீர்கள்
தாமரை இலைகளில்
துளிகள் உருள்வதை
காண்கிறீர்கள்
......நீர்
உங்களையும் பிரதிபலிக்கிறது
மகிழ்கிறீர்கள் !
ஆழத்தில்
.................
வேர்கள் சிக்குண்டு
ஒரு மரணத்தை
சம்பவிக்க காத்துக்கொண்டிருக்கலாம்

Dec 12, 2010

அமெரிக்காவை சூழும் யுத்த மேகம்!


மீரா ஷங்கர் அவமதிப்புக்கு பின் கூடிய மத்திய அமைச்சரவையில் அமெரிக்க வை கண்டித்து கண்டன தீர்மானமும் யுத்த கால அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே sharukh கான், பிரபுல் படேல், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்துல் கலாம் ... ஆகியோருக்கு டவுசரை கழட்டிய அமெரிக்க விமான நிலையங்களின் அத்துமீறிய சம்பவங்கள் வரிசையில் , இப்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சொதனயிடப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவை கொதிப்படைய செய்துள்ளது. இந்திய வில் வீதிகள் தோரும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம், போராட்டம், ரயில் மறியல், பஸ் மறியல், அமெரிக்க தூதரகங்களை கொளுத்துதல் , இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்களின் டவுசர்களை கழட்டுதல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்திய அரசோ பல படிகள் மேலே பொய் அமெரிக்காவுக்கு எதிரான யுத்தத்தை அறிவித்துள்ளது . "ஒபாமா நிர்வாகம் இந்த சம்பவத்துக்காக உடனடியாக மீரா வின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் யுத்தம் உடனடியாக துவங்கும் என்று அறிவித்துள்ளது. பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்திய போர்க்கப்பல்கள் முகாமிட்டுள்ளன , மிக் 2010 ரக போர் விமானங்களும், அக்குனி அமுக்குணி ரக ஏவுகணைகளும் ஒபாமா வீட்டை குறிவைத்து மன்மோகன் வீட்டு மொட்டை மாடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன . மென்மையான பிரதமர் என்று பெயரெடுத்த மன்மோஹனே பொறுமையிழக்கும் வகையில் அமெரிக்க நடந்து கொண்டதை பார்த்து இஸ்ரேல், சௌதி அரேபியா போன்ற நாடுகளே அதிர்ச்சி அடைந்துள்ளன . இந்தியாவின் பலம் தெரியாமல் தவறு செய்துவிட்டு அமெரிக்க இப்போது ஆப்பசைத்த குரங்காக முழிப்பதாக சில நட்பு நாடுகள் கவலை அடைந்துள்ளன . மீராவுக்கு நேர்ந்த அவமதிப்பை கேள்விப்பட்டதும் மன்மோகன், சோனியாவின் கண்கள், இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சிவந்த ஸ்டாலினின் கண்கள் போலவும், கிரான்மா தாக்குதலின் போது சிவந்த பிடெல் காஸ்ட்ரோவின் கண்களை ஒத்திருந்ததாகவும் விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். நிலைமை கைமீரிப்போவதை உணர்ந்த ஒபாமா , சதாம் போல தனக்கும் பதுங்கு குழிகளை தோண்ட சொல்லி இருப்பதாகவும், ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அத்தகைய குழிகளை வடகொரியாவுக்கு பயந்து நாம் ஏற்கனவே தயார் நிலையில் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர் . இத்தகைய சூழலில் ஒரு சமாதான முயற்சியாக , அமெரிக்க விமான நிலையத்தில் கழட்டப்பட்டு , இன்று வரை ஒரு ரசிகரால் பயன்படுத்தப்பட்டுவரும் ஷாருக்கின் டவுசரை மீண்டும் ஒப்படைத்து விடுவதாக அமெரிக்க வெளியுறவு துறை இந்திய விடம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை . 



Sep 16, 2010

2006 க்குப்பிறகு வெளிவந்த சிறந்த கட்டுரை தொகுப்பு நூலுக்கான
பரிசு
,தோழர் குமரன்தாஸ் எழுதிய 'சேதுக்கால்வாய் திட்டமும் ராமேஸ்வரம் தீவு
மக்களும் ' என்ற நூலுக்கு கிடைத்துள்ளது . தமிழ்நாடு
கலைஇலக்கியப்பெருமன்றமும் , நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும்
இணைந்து இப்பரிசை வழங்குகின்றன .

Sep 15, 2010

உதிரிகளின் அரசியலும் -
நீதியற்ற திரைப்படங்களும்

-மேகவண்ணன்

தமிழ் சினிமாவை குறித்துப் பேசுவதென்பது இயல்பாகவே தமிழக அரசியல் குறித்துப் பேசுவதாக ஆகிவிடுகிற நிகழ்வு என்பது புதிராகவும், வியப்பாகவும் ஒருவகையில் அவசியமானதாகவுமே இருக்கிறது. தமிழ் சினிமாவுக்கும் அரசியல் இயக்கங்களுக்குமிடையே உள்ள பிணைப்பு போன்றே முக்கியமானது ஒன்று உண்டு. அது தமிழ்சினிமா பாத்திரங்களாக தொடர்ந்து தோன்றிவரும் தமிழக அரசியல் இயக்கங்களின் தொண்டர்கள், தோழர்கள், இன்னபிறர் போன்றோர் பற்றிய சித்தரிப்பு.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரின் செல்வாக்கு மிகுந்த காலகட்டங்களுக்குப் பிறகு ருத்ரய்யா, பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோர் தமிழில் யதார்த்த சினிமாவிற்கான பரிசோதனைகளைத் துவக்கிய பிறகும் 1980களில் வெளிவந்த 1. சத்யா (சுரேஷ் கிருஷ்ணா - 1988) 2. ஒரு கைதியின் டைரி (பாரதிராஜா - 1985) போன்ற படங்கள் முந்தைய நாயக வழிபாட்டு தமிழ்சினிமா மரபின் தொடர்ச்சியாக மேற்கூறிய அரசியல் இயக்கத் தொண்டர்கள் பற்றிய கதைக்களத்தில் படமாக்கப்பட்டு வெளிவந்தன.

திராவிட இயக்க கருத்தாக்கங்கள் செல்வாக்குப் பெற்ற தமிழ்த்திரைச் சூழலில் திராவிட கட்சிகள் அதிகாரத்தில் இருந்த சூழலில் சமூகம் எண்ணற்ற உள்முரண்பாடுகளுடன் திணறிக் கொண்டிருந்த காலகட்டம் அது. படித்த, வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கையும் அவர்களின் போராட்டங்களும் பல்கிப் பெருகிக் கொண்டிருந்த சூழலில் வெளிவந்தவைதான் மேற்சொன்ன சத்யா (மற்றும்) ஒரு கைதியின் டைரி. அரசியல் இயக்கங்கள் குறித்துப்பேச முற்பட்ட இயக்குனர்கள் யாரும் அவர்களின் கொள்கை முழக்கங்கள், லட்சியங்கள் அவற்றின் குறைபாடுகள் ஆகியன குறித்த ஆழமான விசாரணைகள் எதையும் தோற்றுவிக்கவில்லை. ஒன்றிரண்டாக அவ்வாறு தோன்றியவையும் (‘‘அச்சமில்லை அச்சமில்லை’’ கே.பாலசந்தர்-1984) இயக்குனர்களின் தன்னிலை சார்ந்த (பார்ப்பனர் x சுயமரியாதை / திராவிட இயக்கங்கள்) கேள்விகளையே கொண்டிருந்தன. அவற்றை சமூகம் சார்ந்த, அறவுணர்வு சார்ந்த கேள்விகளாகக் கொள்ள முடியாது. ஏனென்றால், பார்ப்பனத் தன்னிலைகள் கொண்டிருக்கும் கேள்விகள் திராவிட இயக்க சீரழிவுகளைவிட மிகுந்த ஆபத்தானவை.

‘‘ஒரு கைதியின் டைரி’’ யை எடுத்துக் கொள்வோம். அந்தோணி என்கிற (கமல்ஹாசன்) ஒரு அரசியல் கட்சியின் தீவிரத் தொண்டன் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் இயங்குகிறான். தலைவரின் மீதான வழிபாட்டுடனும்கூட. அந்த கட்சியின் தலைவர் மற்றும் அவரது தொழில்முறைக் கூட்டாளிகளான சிலரும் சேர்ந்து அந்தோணியின் மனைவியை பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். அந்தோணி தனது குமுறலை அவர்களிடமே சென்று முறையிடும் அளவு பாமரனாக இருக்கிறான். உண்மையறிந்து கோபப்படுகிறான். தொழில்முறை கூட்டாளிகள் அந்தோணியை சிறைக்கனுப்புகிறார்கள். சிறைவாசம் முடிந்து வயோதிகனாக வெளியில் வரும் அந்தோணி பழிதீர்க்கிறான்.

‘‘சத்யா’’ வில் தன்னை நம்புகிற ‘‘சத்யா’’ வை வைத்து தன் அதிகார போட்டியாளர்களைப் பற்றிய ஆவணங்களை களவாடி அதன் மூலம் நடக்கும் பேரத்தில் தேர்தலில் நிற்கும் ‘‘தண்யாணி’’ என்ற கதாபாத்திரத்தையும் அவரது தொழில்முறை கூட்டாளிகளையும் ‘‘சத்யா’’ பின்னர் பழிதீர்ப்பதை கொண்டு படம் முடித்து வைக்கப்படுகிறது.

கைதியின் டைரியில் மோசமான அரசியல்வாதிகள் X நல்ல போலீஸ் அதிகாரி (மகன் கமல்ஹாசன் பாத்திரம்) என்ற சமன்பாடு இருப்பதுபோல சத்யாவில் மோசமான அரசியல்வாதிகள் X நல்ல போலீஸ் (சத்யாவின் மைத்துனர்) நீதி தவறாத நீதிமன்றம் போன்ற சமன்பாடுகள் முன் வைக்கப்படுகின்றன.

இத்தகைய சமன்பாடுகளே இத்தகைய படங்களின் இறுதிக் காட்சியை தீர்மானித்து பார்வையானவை எவ்வித பதட்டமும், சமகால வாழ்வு குறித்த குழப்பங்களும் இன்றி ‘‘நல்லபடியாக’’ வீட்டுக்கு அனுப்புகின்றன. இந்தச் சமன்பாடானது மோசமான அதிகாரிகள் X நல்ல அரசியல்வாதிகள் என்பதாகக் கூட மாறலாம். அத்தகைய கருக்களுடனும் கூட சில படங்கள் வந்திருக்கலாம்.

இச்சூழலின் தொடர்ச்சியாக 1990-ல் பாரதிராஜாவின் ‘‘என் உயிர்த் தோழன்’’ வெளிவருகிறது. நீண்ட தொடர்ச்சி கொண்ட பாரதிராஜாவின் படைப்புச் செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட காலவெளிக்குப் பின்னர் மிகுந்த சிக்கலானதாகவும், கடும் விமர்சனத்துக்குரியதாகவும் மாறியுள்ளது. ஆனால் ‘‘என் உயிர்த் தோழன்’’ ஒரு தனித்துவமான படம் என்பதைச் சொல்லியாக வேண்டும். சென்னை சேரிப்புறத்தில் வசிக்கும் ரிக்ஷா தொழிலாளியான நாயகன் (தர்மன்) ஒரு அரசியலமைப்பின் தீவிர தொண்டனும்கூட. தலைவரையும், கட்சியையும் தீவிரமாக வழிபாடு செய்யவும், தன் பகுதி மக்களை அக்கட்சியின் வாக்கு வங்கியாக ஒப்புக் கொடுக்கவும் செய்கின்ற அவன் அந்தக் கட்சியின் தலைவர் உள்ளிட்டோரின் சதித்திட்டத்தின்படி ஒரு தேர்தல் வெற்றிக்காக தன் சொந்த கட்சிக்காரர்களாலும், நண்பனாலும் படுகொலை செய்யப்படுகிறான்.

சென்னை அடித்தட்டு மக்களின் வாழ்வியல் குறித்த நேர்த்தியான பதிவுகள் ‘‘அவர்களின் அன்பு’’ இயக்கங்களின்பால் கொண்ட நம்பிக்கை, உழைப்பு ஆகியன சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாயகனை (தர்மன்) கொன்ற பிறகு அதற்கான கூலியாக வாங்கிய பணத்தை எடுத்து, எடுத்துப் பார்த்தபடி கண்ணீருடன் அவ்விடத்தை விட்டு அகலும் நண்பன் பாத்திரம் (சார்லி) பின்னர் குற்றவுணர்வின் தீவிரம் குறையாமல் அழுது அரற்றியபடியே தொடரும் காட்சிகள். பின்னர் கொல்லப்படும் வரை அப்பாத்திரத்தின் முகத்தில் தெரியும் மீதி ஆகியன நுட்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கதாநாயகன் (தர்மன்) தனது தலைவரை முதன்முதலில் நேரில் சந்திக்கும் காட்சியும் அத்தகைய ஒன்றுதான். தலைவர் கோயில் சன்னிதானம் போன்ற காரிடாரில் ஒரு மின் ஒளி வட்டத்துடன் அமர்ந்திருப்பார். நமது தொண்டன் தொலைவில் நின்று கணீர் குரலில் அவர் போடும் கட்டளைகளை கேட்பது போன்றவை நமது வழிபடும் மரபின் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு அரசியலின் காட்சியாக நிற்கிறது.

தொண்டன் வஞ்சகமாக கொல்லப்படும் காட்சியுடன் படம் முடித்திருக்க வேண்டும். ஆனால் பார்வையாளர்களை அப்படி அனுப்பிவிட பாரதிராஜாவுக்கு மனமில்லை போலும். சேரியே திரண்டெழுந்து தலைவர் உள்ளிட்ட மற்றவர்களை பழிதீர்த்தபின் படம் முடிகிறது. ஹீரோ போன்ற தோற்றமும், வசீகரமான பேச்சும் கொண்டு அதன் வழியாக பெண்களை வசீகரித்து ஏமாற்றும் ஒருவன் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவன் என்ற நிலையை அடையும் அதே வேளையில் அவனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டு, அக்கட்சிக்காக தன் எல்லா சக்தியையும் செலவிடுகிற ஒரு தொண்டன் பயன்படுத்தப்பட்டு பின் கொல்லப்டுகிறான்.

வழிபாட்டு அரசியலை பின்னணியாகக் கொண்ட 80-களின் படங்களுக்குப் பிறகு வந்தவை அத்தகைய தீவிர வழிபாட்டை கதைக்களனாக கொண்டிருக்கவில்லை. பின்னர் வழிபாடு என்பதே அத்தகைய ஊழல் அதிகார அமைப்பில் பங்கு பெறுவதற்கான கருவியாகவும் மாறிவிட்டிருதது.

இன்றைக்கு அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறிவிட்டிருக்கின்றன. கட்சிகளே காட்சி ஊடகங்கள் நடத்தவும், நிர்வகிக்கவும் தலைப்பட்டிருக்கின்றன. அதற்கான நிதிப்புலம், அதிகாரம் இவற்றிற்கான சமரசங்களிலும், சமரசத்தின் பலாபலனை அடைவதற்கும் மிகுந்த போட்டி நிலவுகிறது. தலைவன் முதல் கடைசித் தொண்டன் வரை பலாபலனில் தனது பங்கைப் பெற தீவிர முயற்சிகளும், போராட்டங்களும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஓட்டுவாங்கிச் சம்பாதிக்கத் துவங்கினால் இவர்கள் ஓட்டுப் போட்டு ‘எதாவது’ பெற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய சூழல் பற்றிய விமர்சனங்கள், நையாண்டிகளோடு 90-களில் ஒரு சில படங்கள் வந்தன. 1. மக்கள் ஆட்சி ( R.K.செல்வமணி-1995) 2.அரசியல் (R.K..செல்வமணி-1997) ஆகியன.

1991-1995 காலகட்டத்தில் புலனாய்வுப் பத்திரிகைகள், ஊடகங்கள் அனைத்தையும் ஓவர்டைம் வேலை செய்து எழுதித் தீர்க்க வேண்டிய அளவு ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற்று முடிந்தது.மேற்சொன்ன படங்கள் இத்தகைய சூழலை, கவலையை கேலிச் சித்திரமாகத் தீட்ட முற்பட்டன. இத்தகைய படங்கள் கூலிப்படைச் செயல்பாடுகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையிலுள்ள ஆழமான பிணைப்பை குறித்து கேள்விகளை கொண்டிருந்தன. அதுவே அந்த நையாண்டியின் ஆதாரமாகவும் இருந்தது. எனினும் படத்துடன் துவங்கும் கேள்விகள் படத்துக்குள்ளேயே வழங்கப்படும் ‘‘நீதி’’யுடன் முடித்து வைக்கப்பட்டு விடுகின்றன.

நீதியற்ற அரசியலதிகாரம், நீதித்துறை, காவல்துறை, அரசு எந்திரச் செயல்பாடுகள் போன்றன மீது சமரசங்களற்ற கேள்விகளுடன் வந்த படங்களுள் முக்கியமானது ‘‘சாமுராய்’’ (பாலாஜி சக்திவேல் 2002). நமது ஊழல் மலிந்த சமூக அமைப்பில் விடுதலையின் அறமதிப்பீடுகளின் துவக்கம் என்பது சமூகத்தைப் புரிந்துகொண்ட உருவாக்கப்பட வேண்டிய மாற்றுச்சூழல் குறித்த தேடலும், அக்கறையும் கொண்டவர்களாலேயே சாத்தியப்படக் கூடியது என்ற புரிதலை முன்வைத்தது.

நீலம்பாரித்த நமது தமிழ்சினிமாவின் பிம்பவழிபாட்டு விஷச்சூழலில், ‘சாமுராய்’கள் தோன்றுவதற்கான சாத்தியங்கள் வியப்பும், நம்பிக்கையும் தருவதாய் அமைகின்றன. ‘சாமுராய்’க்கும் நாயக முக்கியத்துவம் உண்டு. ஆனால் அது கதையின் ஆதாரமான அறவுணர்வுகளால் சீரமைக்கப்பட்டு முன் வைக்கப்படுகிறது. நமது போராட்ட மரபின் தொடர்ச்சியாக வரும் நாயகர்களுக்கும் வழக்கமான பிம்ப நாயகர்களுக்கும் உள்ள வேறுபாடு கவனிக்கப்பட வேண்டியது.

‘‘சாமுராய்’’ படத்திற்கும் பிற படங்களுக்குமுள்ள முக்கியமான வேறுபாடு-சாமுராய் கட்சி அமைப்பிற்கு வெளியில் நின்று கட்சியையும், சமூகத்தையும் மதிப்பிடுவதில் உள்ள அரசியல் அறிவுதான்.

தமிழக அரசியல் குறித்தும், மிக தரம் தாழ்ந்துவிட்ட அதன் அந்தரங்க நடவடிக்கைகள் குறித்தும் வெளிவந்த ஒரு ஆர்ப்பாட்டமான கேலிச்சித்திரம் ‘புதுப்பேட்டை’ (செல்வராகவன் - 2006).

புதுப்பேட்டை சொல்வது இதுதான் - தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுக்கோ, அதன் தலைவர் தொண்டர்களுக்கோ அறம், நீதி சார்ந்த எந்த நம்பிக்கையும் இல்லை என்பதைத்தான். வழக்கமாக தமிழ்சினிமாவில் வரும் நீதி நிலைநாட்டப்படுகின்ற இறுதிக்காட்சி கூட ‘‘புதுப்பேட்டை’’ யில் இல்லை.

அடியாள் வேலை செய்யும் தனது தந்தையாலேயே தனது தாய் கொல்லப்பட்டத்தைக் கண்டு பீதியுறும் மாணவனான கொக்கிகுமார் வீட்டிலிருந்து தப்புகிறான். பின்னர் பிச்சையெடுக்கிறான். 80-களில் கார் கண்ணாடி துடைத்துவிட்டு காசு கேட்கும் சிறுவர்களை அரவணைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று அன்புகாட்டி வளர்க்கும் அப்பாவி பணக்காரன் யாரும் 2006-ல் இல்லைபோல் தெரிகிறது. அரவணைக்கத்தான் இல்லை. கார் துடைத்த கூலி கூட கொக்கிகுமாருக்கு கிடைக்கவில்லை. கழுத்தில் அழுக்குத் துண்டு கட்டிக்கொண்டு நடத்தும் ‘‘அம்மா.. கழுத்துல ஆபரேசன்’’ என்ற நாடகம் அமோகமாக ஓர்க் அவுட் ஆகிறது.

பிச்சையெடுக்கப் போன இடத்தில் கஞ்சா விற்பவர்களோடு சகவாசம்- பின்னர் சிறைவாசம். பின்னர் அடியாளாக பதவி உயர்வு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் வாழ்வை அனுபவிக்கவும், அதிகாரத்தை ருசிப்பதற்காக எதிரிகளை ஒழித்துக்கட்டுவதுமாக கொக்கி குமாரின் தமிழக பிராண்ட் அரசியற் செயற்பாடுகள் சுவாரஸ்யமான காட்சிகளாயிருக்கின்றன.

நமது மாவட்டச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், கல்வி நிறுவனத் தந்தைகள் ஆகியோர் கொக்கி குமாரின் இளமைப் பருவத்தை தாண்டித்தான் வந்திருக்க வேண்டும்.

சிறு வயதிலேயே வன்முறையான வாழ்வுக்குள் தள்ளிவிடப்பட்ட ஒருவன், மிகுந்த பயமும், தைரியமும் கொண்ட முரண் உருவத்துடன் எவ்வாறு தமிழக அதிகார அரசியல் அமைப்பின் பகுதியாக / பிரதிநிதியாக மாறுகிறான் என்பதைச் சித்தரிக்கவே ‘‘புதுப்பேட்டை’’ முயலுகிறது.

ரவுடிகள் பற்றிய சித்தரிப்புகள்

தலைநகரம் (சுராஜ் - 2006) போன்ற ரவுடிகள் பற்றிய சித்தரிப்பை கொண்டிருக்கும் படங்கள் மிகுந்த ஆபத்தானவையாக இருக்கின்றன. பொதுவாக பழைய தமிழ்ப் படங்களில் இத்தகைய ரவுடிகளே வில்லன்களாகவும், இவர்களை எதிர்ப்பவர்களே கதாநாயகர்களாகவும் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர். சமூகம் தனது தார்மீக மதிப்பீடுகளை இழந்துவிட்டு அதே வேகத்தில் நல்லவர்கள், ரவுடிகளின் தியாக உள்ளம், ரவுடிகளின் சமூக அக்கறை போன்ற பிரிவுகளில் படங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

ரவுடிகளுக்கென்று அறக்கோட்பாடுகள், கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகள் போன்ற மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் வாடகைக் கொலையாளிகள் மனித நேயர்களாகவும், பண்புச் சிகரங்களாகவும் சித்தரிக்கப்படும் அபத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வின் மீதும், இருத்தலின் மீதும் தொடர்ந்து பெரும் சுரண்டலையும்,தாக்குதல்களையும், அழித்தொழில்களையும் செய்து வரும் இவர்கள் மீதான தமிழ் சினிமா இயக்குநர்களின் பரிவுப்பார்வை நமக்கு ரொம்ப வியப்பாக இருக்கிறது. இத்தகைய நியாயப்பாடுகளை ஒருபுறம் வைத்துக் கொண்டே மறுபுறம் போலீஸின் போலி என்கவுண்டர்களுக்கான நியாயப்பாடுகளையும் தமிழ்சினிமா தொடர்ந்து வழங்கி வருகிறது.

போதைப் பொருள் வணிகம், ஆட்கடத்தல், அரசியல் எதிரிகளை பழிதீர்க்கும் கூலிப்படைச் செயற்பாடுகள் போன்றவற்றால் சமூகத்திற்கு எவ்வித நலனும் இல்லை. ஆனால் நியாயமான ரவுடிகள் பற்றிய தமிழ்சினிமா சித்தரிப்புகள் பார்வையாளனை சிந்தனைப் பூர்வமாக சுரண்டத் தலைப்படுகின்றன.

மேற்சொன்ன ரவுடிகள் இன்னபிறரும் சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்படுவர்கள்தான் எனினும் கூட அவர்களின் செயல்பாடுகள் எளிய தனிமனிதனை எவ்விதங்களில் பாதிக்கின்றன, பதட்டமடையச் செய்கின்றன என்பதும் இதனின்று மீள்வது குறித்த கேள்விகளை சினிமாக்கள் ஆதாரமாக கொண்டிருக்க வேண்டும்.

அத்தகைய பணிக்கு இயக்குநர்கள் நேர்மையுடன் செய்ய வேண்டியது. இத்தகைய உதிரிகள் எப்படிப்பட்ட சமூகத்தை கட்டிக் காப்பதற்கான / கட்டித் காத்துக்கொண்டிருக்கும் அதிகாரங்களினுடைய ஏவலாட்களாக இயங்குகிறார்கள்? என்பதை அம்பலப்படுத்துவதுதான்.

அத்தகைய முயற்சிகளின் துவக்கமாக அல்லது சிறு தூண்டலாக ‘‘புதுப்பேட்டை’’யைப் பார்க்க முடியும் என்று கருதுகிறேன். ஆனால் ‘‘புதுப்பேட்டை’’ வன்முறையை ஒரு சகிப்பாக மாற்றுகிற தொனி கவலையளிப்பதாகவும் உள்ளது. மொழிமாற்றுப்படமாக தமிழுக்கு வந்த ‘‘சத்யா’’ (ராம்கோபால் வர்மா)வையும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகச் சொல்லலாம்.

(புதியகாற்று நடத்திய தமிழ் சினிமா அகமும் புறமும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)



Aug 21, 2010

Wednesday, August 11, 2010

காஷ்மீர்: சவக்குழியின் சாட்சியங்கள்


காஷ்மீர்:
இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும்


சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை!

முன்னுரை

காஷ்மீர் : இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும் என்ற இவ்வெளியீட்டில் காஷ்மீரில் 1989 -2009ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய ராணுவ மற்றும்
துணை ராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து, ஆய்வு செய்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தினரால் வெளிக்கொணரப்பட்ட “புதைக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற ஆய்வு அறிக்கையின் தமிழாக்கத்தை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வெளியிட முன்வந்துள்ளது.
காஷ்மீர் பிரச்னை என்பதே இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னை என்றும், காஷ்மீரிகளின் அடையாளம் மற்றும் சுதந்திர வேட்கைக்கான போராட்டம்
என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது போன்றும், இந்திய இராணுவப் படையினர் போராளிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றிவிடவே
நடத்தப்படும் யுத்தம் என்றும், இந்திய ராணுவத்தினரிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றவே போராளிகள் நடத்தும் யுத்தம் என்பதாகவும் பல முகங்களாக வெளிப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசு, பாகிஸ்தான், போராளிக்குழுக்கள் இவற்றின் இடையே சமாதான பேச்சுவார்த்தை என்பது முன்வைக்கப்படும் அதே வேளையில், காஷ்மீர்
பகுதியில், 6 லட்சத்திற்கும் மேலான ராணுவ, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ராணுவப் படையினருக்கும் போராளிக் குழுக்களின் இடையிலான மோதல் என்ற பெயரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 70,000
என்பதாகவும், மோதலில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000க்கும் மேலாகவும் காணப்படுவது இந்திய அரசின் மனித உரிமை மீறல்களின் அப்பட்டமான
வெளிப்பாடாகும்.

மோதல்களில் கொலை செய்யப்பட்ட அப்பாவிகள் கூட தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர் என்பதற்கு 2004ம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் நடத்திய பத்ரபால் படுகொலை ஒரு
சான்றாகும்.

சில நேரங்களில், இந்திய ராணுவத்தினர் நடத்திய படுகொலைகளை மறைக்க, போராளிக் குழுக்கள் படுகொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். சட்டீஸ்சிங் புறா என்ற பகுதியில் 35 சீக்கியர்கள் எல்லைப்புற காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அதற்கு பொறுப்பாளியாக போராளிக் குழுக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டன.
இந்திய ராணுவத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை போக்கில் இருந்து மனித உரிமையாளர்களும் கூட தப்பவில்லை. 1996ம் ஆண்டு, மனித உரிமையாளர் அன்டிராபி
அவர்களின் படுகொலை இதற்கு சான்றாகும். அன்டிராபியின் படுகொலையை நிகழ்த்திய ராணுவப் படை தலைவர் மேஜர் அவ்தார் சிங் மீது 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

தற்போது 2008ம் ஆண்டு அமர்நாத் யாத்திரை அறக்கட்டளைக்கு அரசு நிலங்களை தாரை வார்த்து மதவெறி மோதலுக்கு (இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக) வழிவகை
செய்து அரசு செயல்பட்டதும், 2009ம் ஆண்டு நடந்த ஷோபியன் கூட்டு பாலியல் வன்முறையில் காவல் துறையின் அட்டூழியத்தை மறைக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்ட விதமும்,தற்போது 3 இளஞ்சிறுவர்கள் துணை ராணுவப் படையினரால்
சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு எழுந்த மனக் கொந்தளிப்பை ஆற்றும் வகையில் செயல்படாமல், துணை ராணுவப் படையினரை ஆதரித்து நிற்கும் மத்திய, மாநில அரசின் நிலையும் காஷ்மீர் மக்களை, மேலும் அன்னியப்படுத்துவதாகவே அமைகிறது.

இவற்றிற்கிடையில் ராணுவத்திற்கான தனிச்சிறப்பு அதிகாரச் சட்டம் 1990களில் ஜக்மோகன் கவர்னராக பணியாற்றியபோது பிறப்பிக்கப்பட்டது. மாறிமாறி வரும் மத்திய, மாநில அரசுகள்
இச்சட்டத்தை வாபஸ் பெறுவதாக வாக்குறுதி அளித்தபோதும்,எவரும் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இது குறித்த நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டம் வடகிழக்கு மாநிலங்களில் எத்தகைய ராணுவ அட்டூழியங்களுக்கு துணை நின்றது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும்
அறிவர்.

இப்பதட்டமான நிலையில் மேலும் ராணுவமயமாக்கல் என்பது நிலைமையை மோசமடையவே செய்யும். ராணுவத்தை திரும்பப் பெறுவதன் மூலமே, ராணுவமயமாக்கலை
கைவிடுவதன் மூலமே, ராணுவப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதன் மூலமே பதட்ட நிலையை சீரடைய செளிணிய இயலும்.

இந்திய ராணுவத்தினரின் படுகொலையையும், படுகொலைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளையும் பாதுகாத்து நிற்கின்ற இந்திய அரசின் நடவடிக்கையை, போராடும் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான விருப்பார்வங்களை ஒடுக்கும்,
கொடுமையான மனித உரிமை மீறல்களாகவே கருத இயலும். இந்த மனித உரிமை மீறலுக்கு எதிரான இணைந்த குரலை எழுப்ப முன்வருவது அனைத்து ஜனநாயக, மனித உரிமை அமைப்புகளின் உடனடி கடமையாகும்.

இச்சூழலில் காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை இந்தியாவின் அனைத்து மக்கள் தரப்பினரையும் சென்றடைவது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு
எதிரான ஒரு வலுவான குரலை எழுப்பச் சாதகமான நிலையை உருவாக்கும். இந்த முயற்சியின் சிறு அங்கமாக தீர்ப்பாயத்தின் அறிக்கையை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் தமிழில் வெளிக்கொணருகிறது.
-------------------------------------------------------------------------------

புதைக்கப்பட்ட சாட்சியங்கள்:

இந்திய நிர்வாகத்தின் கீழ் அடங்கிய காஷ்மீரில் நிலவும் மனித உரிமைகளும், நீதி நிலைமைகளும் குறித்த சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை!


நவம்பர் 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட நேரடி ஆய்வில் காஷ்மீரத்தின் பண்டிபோரா, பாராமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களைச் சேர்ந்த 52
கிராமங்களில் உள்ள 2,700 விவரம் அறியப்படாத, அடையாளம் காணப்படாத 2,943க்கும் மேலான சடலங்களைக் கொண்ட புதைகுழிகள் குறித்து இங்கு ஆவணப்படுத்தப்படுகிறது.
இவ் ஆவணம், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டகரல் ஸ்டெடியில் தொல்லியல் பிரிவு பேராசிரியரான முனைவர் அங்கனா சட்டர்ஜி, காஷ்மீர் பிரச்னை மீதான சர்வதேச
மக்கள் தீர்ப்பாயத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆன வழக்கறிஞர் பர்வேசு இம்ரோசு, இ.பி.டபிள்யூ, என்ற பத்திரிகையில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கௌதம் நவ்லாகா, காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி என்ற அமைப்பின் துணைத்தலைவரான சாஹிர்
உத்தின், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணியின் திட்ட ஒருங்கிணைப்பாளரான குர்றம்பர்வேசு ஆகியோர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது.

ஆய்வின் முடிவுகள்

1999-2009ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் மோதல்களிலும், போலி மோதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சடலங்களைக் கொண்ட
புதைக்குழிகளைக் குறித்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் ஆய்வு செய்தது. நீதிக்கு புறம்பாகவும், ஒருதலைப் பட்சமாகவும், முகாந்திரம் ஏதும் இன்றியும் படுகொலை
செய்யப்பட்டவர்களின் - இந்திய ராணுவத்தினராலும், துணை ராணுவத்தினராலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் 2,373 புதைகுழிகளில் (87.9 விழுக்காடு) பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 154 புதைகுழிகளில் இரண்டுக்கு மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 23 புதைகுழிகளில்
இரண்டுக்கும் மேற்பட்ட, மூன்றில் இருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன.

பல சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதை வழக்கமாக,ஒன்றுக்கும் மேற்பட்ட, அடையாளம் அறியப்படாத, மனித சடலங்கள் அடங்கிய புதைகுழி என அடையாளப்படுத்தலாம்.
மானுடத்திற்கு எதிரான போர்க் குற்றங்களும், இனப்படுகொலைகளும் நடத்தப்படும்போது தான் பல சடலங்கள் அடங்கிய புதைகுழிகள் காணப்படுகின்றன என்று கல்வியறிவாளர்கள்
குறிப்பிடுகின்றனர். திரளாக சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதே தண்டனை ஏதும் இன்றி கொலைகளை செய்வதை நோக்கமாக கொண்டிருந்தது என்பதோடு, ஒன்றுக்கு மேற்பட்ட
வர்களை கொலை செய்வதையும், கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைத்து மோசடி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. அப்படியெனில், இந்திய
ராணுவமும், துணை ராணுவப் படையினரும் இணைந்து “ஒட்டுமொத்தமாக புதைப்பதற்கான” பரந்த வெளிகளை உருவாக்க, கூட்டாக புதைப்பது என்பதன் ஒரு பகுதியே
பண்டிபோரா, பாராமுல்லா, குப்வாரா ஆகிய இடங்களில் காணப்படும் புதைகுழிகள் ஆகும்.

மரணத்திற்கு பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தொடர்ந்து (routine) ராணுவத்தாலும், உள்ளூர் காவல்துறையினரை உள்ளடக்கி, துணை ராண்வப் படையினராலும் கையாளப்பட்டது. குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினரால் அவ்வுடல்கள் “ரகசிய புதைகுழிகளுக்கு” கொண்டு வரப்பட்டன. இப்புதைகுழிகள், உள்ளூரில் சவக்குழியை தோண்டுபவர்களோடு, அவற்றை பாதுகாப்பவர்களாலும் தோண்டப்பட்டு, அவற்றில் சாத்தியப்படும் போதெல்லாம், இஸ்லாமிய மத உணர்வுகளை கருத்தில் கொண்டு, சடலங்கள் தனியாகவும், குறிப்பாக ஒட்டுமொத்தமாக அல்லாமல் புதைக்கப்பட்டன.

இப்புதைகுழிகளில், சில விதிவிலக்குகளைத் தவிர,பெரும்பாலும் ஆண்களின் சடலங்கள் காணப்பட்டன. சாதாரண குடிமகனுக்கு எதிரான வன்முறை என்பது விரிவடைந்து
பெண்கள் மீதும் வன்முறை ஏவிவிடப்படுகின்றன. இவ்வாறு காணாமல் போவது, மரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, சிதறிப்போன குடும்பங்களை கவனிக்கும் கடமையை
மேற்கொள்ளும்படியும், நீதியை பெறுவதற்கான பணிகளில் ஈடுபடும்படியும் பெண்கள் உந்தப்படுகின்றனர். இப்புதை குழிகள், வயல்வெளிகள், பள்ளிகள், வீடுகள், பொதுவான சமூக
நிலங்களில் அமைந்துள்ளன என்பதால், உள்ளூர் சமூகத்தினர் மீது இதன் தாக்கம் பயங்கரமானதாகக் காணப்படுகிறது. இந்திய ராணுவமும், கூட்டு காஷ்மீர் காவல் துறையினரும் புதைகுழியில், சவக்குழியில் புதைக்கப்பட்ட முகம் தெரியாத
அடையாளம் காணப்படாத சடலங்கள் யாவும் அயல் நாட்டு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் சடலங்கள் என்று வழக்கமாக கூறி வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எல்லைப் பகுதிகளின் வழியாக காஷ்மீரத்திற்குள் ஊடடுருவும்
போது அல்லது காஷ்மீரில் இருந்து ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தானிற்குள் புக முயன்றபோது, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிகாரப்பூர்வ அரசு சொல்லாடல்களில், தற்போதைய உள்ளூர் காஷ்மீர் குழுக்களின்
வன்முறையற்ற அரசியல் மற்றும் பிரதேச சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை, உள்ளூர் எதிர்ப்பு நடவடிக்கை போராட்டங்களை, பயங்கரவாத நடவடிக்கைகள் என்று
சித்தரித்து எல்லை தாண்டிய தீவிரவாதத்துடன் இணைத்து ஊதிப் பெருக்கி குறிப்பிடுகின்றனர்.

கணிசமான நிகழ்வுகளில், சடலங்களை தோண்டி எடுத்து அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளில்
காஷ்மீர் நெடுகிலும் நடந்த “மோதல் கொலைகள்” யாவும் “போலி மோதல் கொலைகளே” என்று உண்மையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. சில நிகழ்வுகளில் சடலங்கள் புதைக்கப்
பட்டதற்கு பின்னர், அவற்றை அடையாளம் காண்பதற்கு இரு வழிமுறைகள் கையாளப்பட்டன. அவை (1) சடலங்களை தோண்டி எடுத்து அடையாளம் காண்பது (2) புகைப்படங்களை பயன்படுத்தி அடையாளம் காண்பது என்பன.

காஷ்மீரத்தின் எண்ணற்ற மாவட்டங்களில், இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய 50க்கும் மேற்பட்டதான மோதல் படுகொலைகள் என்று குறிப்பிட்டவை குறித்தும், இவ்வறிக்கை
ஆளிணிவு செளிணிதது. இவ்வாறு கொலை செளிணியப்பட்டவர்களில் 39பேர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எதிர்ப்பாளர்கள். 4 பேர் இந்து மதத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்கள். 7 பேர் எத்தகையினர் என தீர்மானிக்கப்பட இயலவில்லை. இந்த நிகழ்வுகளில் 49 பேர்கள்
பாதுகாப்பு படையினரால் “அயல்நாட்டு தீவிரவாத கலகக்காரர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். ஒரு சடலம் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டது. தொடர்ந்த
ஆளிணிவுகளின் அடிப்படையில் இவர்களுள் 47 பேர் போலி மோதல் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் என்றும் ஒருவர் உள்ளூர் தீவிரவாதி எனவும் அடையாளம் காணப்பட்டது.

சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் காஷ்மீரில் உள்ள 10 மாவட்டங்களில், மூன்று மாவட்டங்களில் மட்டுமே, பகுதியளவில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தது. எங்களது
ஆய்வுகளும், துவக்கநிலை சாட்சியங்களும் அங்கு நிலவும் கடுமையான நிலைமையை சுட்டிக்காட்டுகின்றன. அனைத்து 10 மாவட்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் 1989ம் ஆண்டில் இருந்து காணாமல் போக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் 8000க்கும் மேற்பட்டவர்களாக இருக்கக்கூடும் என மதிப்பிடுவது நியாயமானதாகவே இருக்கும். இது முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத திரளாக சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளில் காணப்படும் சடலங்களின் எண்ணிக்கையுடன் இணையாக உள்ளது.

குற்றச்சாட்டுகள்

தற்போது நடைபெற்றுவரும் மோதல்கள் என்ற பின்னணியில் இந்தியாவினால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரத்தில் கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்த கையாண்ட வழிமுறைகளும், திட்டங்களும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும்.
இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரத்தில், இந்திய ஆட்சி முறையானது மரணத்தையும், கட்டுப்பாட்டையும், சமூக கட்டுப்பாட்டிற்கான தந்திரங்களாக கையாண்டு வருகிறது.
கட்டுப்பாடானது கண்காணிப்பினாலும், தண்டனையாலும்,அச்சத்தாலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. “சட்டத்திற்கு புறம்பான” வழிகளிலும், சட்டத்தின் அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்களாலும் மரணங்கள் பரவலாக்கப்பட்டு வருகின்றன.
ஆள்வதற்கான இந்த தந்திரங்கள் கொல்வதற்கும், சாவைப் பற்றிய அச்சத்தை மட்டுமல்லாது கொலை பற்றிய அச்சத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரந்த அளவிலும் தீவிரமான முறையிலும் நடத்தப்படும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எதிராக, இந்திய அரசின் ராணுவத்தாலும், துணை
ராணுவப் படையினராலும் தொடர்ச்சியாகவும் விரிந்த அளவிலும் நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியே ஆகும். சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இந்த அறிக்கையில் முன்வைத்துள்ள
சாட்சியங்களை பரிசீலிக்கவும், ஒப்பீட்டு பார்க்கவும், பொருத்தமானதா என பரிசீலனை செய்யவும், நம்பத்தகுந்த சுயேச்சையான சர்வதேச அமைப்புகளை கேட்டுக்கொள்கிறது. இது
மட்டுமன்றி, இவ்வமைப்புகள் இந்திய அரசை இதுபோன்ற ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளும்படி கோர வேண்டும் என முன்வைக்கிறது.

ஜம்மு-காஷ்மீரத்தில் இந்திய நிர்வாகம் மானுடத்திற்கு எதிராக கொடுமைகள் இழைத்துள்ளது என்ற கருத்தை சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் பரிசீலிக்கவில்லை. ஐக்கிய
நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் இந்திய அரசால் காஷ்மீரம் ராணுவமயப்படுத்தப்படுவதன் மோசமான விளைவுகளை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ ஆற்றலற்ற வகையில் உள்ன என நாங்கஷீமீ குறிப்பிட விரும்புகிறோம். இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத திரளாக சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும்
சாட்சியங்கள் குற்றவாளிகளை தண்டித்து பிற நீதித்துறை சமூகபோக்கின் ஊடே நீதியை பெறவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

1989க்கும், 2009க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம் ராணுவமயமாக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட வன்முறையில் 70,000க்கும்
மேற்பட்ட சாவுகள் நிகழ்ந்துள்ளன. இப்படுகொலைகள்,சட்டத்திற்கு புறம்பான அல்லது போலி மோதல் படுகொலைகள்,சிறைக் கொடுமைகள், பிற வழிகளிலான கொடுமைகள் மூலமாக
நிகழ்த்தப்பட்டு உள்ளன. நிகழ்ந்து வரும் சச்சரவுகளில் (conflict) எந்தவித தண்டனையும் இன்றி, 6,67,000 ராணுவ, துணை ராணுவப் படையினர் தொடர்ந்து செயல்படுவதுடன் தொடர்ந்து காஷ்மீரத்தில் சட்டம் ஒழுங்கை முறைப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அரசே கூட சட்டம், அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மோதல்கள் நீடித்து கொண்டிருப்பதையே வெளிப்படுத்தி வருகிறது.

xxxxxxxx

இந்திய அரசே!

* ராணுவ மயமாக்கலை உடனே கைவிடு

* காஷ்மீரத்தில் உள்ள 6,67,000 ராணுவ, துணை ராணுவப் படையினரை வாபஸ் வாங்கு!

* ராணுவப் படையினருக்கான தனிச்சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் வாங்கு!

* அப்பாவி மக்களை மோதல் படுகொலை செய்த ராணுவ அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வகை செய்!

* காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் போராடும் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்து!
///////////////////////////////////////////////////////////////////////////////

வெளியீடு:
குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
17, பாலாஜி மேன்சன், முள்ளுவாடி கேட்

Aug 20, 2010

ங்கினான் : பொன்னிலா

சட்டக்கல்லூரி நான்காம் ஆண்டு மாணவரும் ஈழப் போராட்டம், மனித உரிமை விஷயங்களுக்காக போராடியவருமான தோழர் அசோக்குமார் என்னும் இனியன் இரண்டு நாட்களாகியும் நினைவு வராமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். நினைவு வருமா? பிழைப்பாரா? பிழைத்தாலும் முன்பைப் போல நினைவாற்றலோடு எழுந்து நடக்க முடியுமா? எதுவுமே தெரியவில்லை.

தன் பிள்ளையின் எதிர்காலம் குறித்த எந்த நம்பிக்கையும் இல்லாத அந்த ஏழைத் தாய் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நமக்காக பல பிரச்சனைகளுக்காகவும் போராடிய தோழர் இனியனைத் தாக்கிய திருக்கழுக்குன்றம் காவல்நிலைய அதிகாரி ஆல்பர்ட் விலசனும் அவரது அடியாள் படையும் இன்னும் தண்டிக்கப்படாத நிலையில் சாதி வெறி என்னும் இருண்ட மேகம் மிக வேகமாக நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. தலித்துக்களுக்காகப் பேசவோ போராடவோ உண்மையான தலைவர்கள் எவரும் இல்லாத நிலையில் சில காலம் குறைந்திருந்த தாக்குதல் மீண்டும் தமிழகம் முழுக்க தலையெடுக்கிறது.

அத்தியாவசியப் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, மின்வெட்டு, நிலங்கள் பறிக்கப்படுதல், வலுக்கட்டாய இடப்பெயர்ச்சி என மக்களின் துன்பங்கள் அதிகரித்துச் செல்லச் செல்ல மக்கள் வன்முறையும் ஒரு பக்கம் வெடித்து வருவதைக் காண முடிகிறது. அத்தகைய தன்னெழுச்சிப் போராட்டங்களைக் கூட போலீஸ் இரும்புக் கரம் கொண்டு நொறுக்கும் போது தலித்துக்கள் எல்லாம் எம்மாத்திரம். அப்படி தன்னெழுச்சியாய் கிளர்ந்ததுதான் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்.

சென்னை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவரான அசோக்குமார் என்னும் இனியனை திருக்கழுக்குன்றம் போலீசார் தாக்கியது தொடர்பாக, 18-ஆம் தேதி சென்னை பாரிமுனைச் சந்தியை மறித்து நடந்த ஏழு மணி நேரப் போராட்டம். வழக்கம் போல மத்யமரின் பப்ளிக் நான்சென்ஸ் மனோபாவத்தையும் மீறி சுமார் ஏழு மணி நேரம் சென்னையை உலுக்கியது.

17-ஆம் தியதி அசோக்குமார் பயணம் செய்த பேருந்தில் அவருக்கும் பக்கத்து இருக்கைக்காரருக்கும் வாய்த்தகராறு ஏற்பட டிரைவர் பேருந்தை திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருவரையும் போலீசிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றிருக்கிறார். தன்னை ஒரு சட்டக்கல்லூரி மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்ட இனியனை திருக்கழுக்குன்ற காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் தலைமையில் சில போலீசார் விசாரித்துக் கொண்டிந்த போது.

அங்கு வந்த இன்னொரு காவலர் ‘’சார் இவன் தான் சார் இலங்கையில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடுவான். போஸ்டர் ஒட்டி டார்ச்சர் பண்ணுவான். செங்கல்பட்டு இலங்கைத் தமிழர் அகதி முகாம் பிரச்சனையிலும் நமக்கெதிராக கூட்டம் போட்டு போஸ்டர் ஒட்டினதெல்லாம் இவனும் இவனோட ஆளுங்களும்தான் சார்” என்று வந்த காக்கிச் சட்டை போட்டுக் கொடுக்க. திருக்கழுக்குன்ற காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் ’’பறத் தேவுடியாப் பயலா நீயி…… என்றபடி எட்டி உயிர் நிலையில் உதைத்திருக்கிறார். அடுத்தது அத்தனை காக்கிச் சட்டைக்காரர்களும் ஒன்று சேர்ந்து இனியனைச் சுற்றி நின்று ஆல்பர்ட் விலசன் தலைமையில் நிர்வாணமாக்கி உதைத்திருக்கிறார்கள். அடிவயிற்றிலும், விதைப் பகுதியிலும் விழுந்த உதைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத இனியன் அப்படியே நிலைகுலைந்து விழ நிர்வாணமாக லாக்கப்பில் போட்டிருக்கிறார்கள். மெள்ள மெள்ள இனியன் லாக்கப்பிலேயே நினைவும் இழக்க பொய்யான தகவலைச் சொல்லி போலீஸ் இனியனின் உறவினர்களை அழைக்க அவர்கள் வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்க்கிறார்கள்.

அங்கு கொண்டு செல்லப்பட்ட இனியன் காவல்துறையினரின் தாக்குதலால் வலி தாங்க முடியாமலும் அவமானத்தாலும் தூக்கில் தொங்கி விட்டார். தூக்கில் தொங்கி கொஞ்ச நேரம் கழித்து தூக்கில் தொங்கியவரை இறக்கி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இனியன் இப்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

தாக்குதல் நடந்து இரண்டு நாட்களாகியும் இன்னமும் குற்றவாளிகளான திருக்கழுக்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்படவில்லை.

இனியன் தூக்கில் தொங்கினார் என்று செய்தி கசியத் துவங்க சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பாரிமுனை சந்திப்பை நான்கு பக்கமும் அடைத்து போராடினார்கள்.திருக்கழுக்குன்றத்தில், செங்கல்பட்டில், விழுப்புரத்தில், கோவையில், என வழக்கறிஞர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களும் போராடத் துவங்க சென்னையில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் ஏழு மணி நேரம் நீடித்தது. அந்த போராட்டத்தில் கூட போலீசும் அரசும் நீதித்துறையும் மாணவர்களை எப்படியாவது ஏமாற்றி கலைந்து போகச் செய்ய மட்டுமே நினைத்ததே தவிற குற்றவாளியான ஆல்பர்ட் வில்சனை கைது செய்யவோ சஸ்பெண்ட் செய்யவோ முன்வரவில்லை. ஜாமீனில் வெளிவரக்கூடிய லேசான காயத்தை ஏற்படுத்தியதாக ஒரு வழக்கை மட்டும் ஒப்புக்கு பதிவு செய்து அந்த சாதி வெறியனை பாதுகாத்திருக்கிறது தமிழக அரசு.

முப்பது லட்சம் நாற்பது லட்சம் செலவு செய்து தனியார் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைகளும் சமீபத்தில் சில போராட்டங்களை நடத்தியதைப் பார்த்தோம். காரணம். கல்லூரி வண்டி சரியில்லை, லேபில் விளக்கில்லை, டீயில் டிகாஷன் இல்லை, காபியில் கலர் இல்லை என்பதுதான் அவர்கள் போராட்டத்தின் நோக்கம்.

இம்மாதிரி பணக்கொழுப்பெடுத்த இவர்களின் போராட்டங்களில் எனக்கு எப்போதுமே அனுதாபம் இருந்ததில்லை காரணம். எந்த பொதுப்பிரச்சனைக்காவது இவர்கள் வந்திருப்பார்களா? கல்வி தனியார் மயமாக்கப்பட்டு பெரும் வணிகக் கொள்ளையில் ஈடுபடும் கல்வி வள்ளல்கள் குறித்தெல்லாம் இவர்கள் என்றாவது கவலைப்பட்டிருப்பார்களா? இடஒதுக்கீடு,சமச்சீர்கல்வி, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி போன்ற கோஷங்களில் இந்த மாணவர்களின் கருத்தைக் கேட்டுப்பாருங்கள் அப்போது தெரியும் இந்த பாப்கார்ன் பேபிகளின் உண்மை முகத்தை.

சரி உன் பிரச்சனைக்குத்தானே போராடுகிறாய் அதற்கு ஏன் முகத்தை மாவோயிஸ்டுகள் மாதிரி இப்படி துண்டால் மூடி விட்டு டிவியில் பேசுறீங்க………….துணியை எடுத்துட்டு துணிச்சலா பேச வேண்டியதுதானே என்றால் பயம் அவன் ஆள் வெச்சு அடிப்பானாம்………….ஆனால் சட்டக் கல்லூரி மாணவர்கள்.
சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பிரச்சனை என்றாலும் அரசியல் பிரச்சனை என்றாலும் ஈழத்தில் போர் நிறுத்தம் கோரினாலும் இட ஒதுக்கீடு கோரிக்கை என்றாலும் முதலில் போராடுவது சட்டக்கல்லூரி மாணவர்கள் அல்லது வழக்கறிஞர்கள்தான் காரணம்.

அவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருகிறார்கள். அதுவும் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து படிக்க வருகிறார்கள். ஆகவே சமூக உணர்வும் கோபமும் ஏனைய ஆதிக்க சாதி மாணவர்களுக்கு இருப்பதை விட கூடுதலாகவே இவர்களுக்கு இருக்கும். போராடும் சக்திகளில் தலித் மாணவர்கள் இருக்கும் போது போராட்டங்களை ஒடுக்கும் சக்திகளாக இருக்கும் காவல்துறையில் யார் அதிகம்? ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட ஒரு இனத்தை மிக அதிகமாக காவல்துறையில் சேர்த்தார்கள். ஜெ ஆட்சியில் கொடியன்குளம், என்றால் கருணாநிதி ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர்கள் 19 பேர் அடித்துக் கொல்லப்பட்ட தாமிரபரணிப் படுகொலை என எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கு முழுக் காரணமும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியைச் சார்ந்த சாதி வெறி போலீஸ்தான் காரணம். இதை நான் மண்டைக்காடு கலவரத்தில் அநாமதேயமாக கொல்லப்பட்ட மீனவ மக்கள் படுகொலையில் துவங்கி கண்டு வருகிறோம். நாடார்கள், தேவர்கள், நாயக்கர்கள், போன்ற சமூகத்தவர்கள் போலீசில் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் தலித்துக்களின் எதிர்ப்புப் போராட்டத்தை தமிழக போலீஸ் எதிர்கொள்கிற விதத்தை காக்கிச் சட்டைக்குள் இருக்கும் சாதி வெறியை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

சட்டகல்லூரி மாணவர் இனியனைத் தாக்கியதும் இதே சாதி வெறிதான். இது ஏதோ காவல்துறையில் மட்டுமே உள்ளது என்று நினைத்து விடாதீர்கள். அரசு அலுவலகத்தில், பொது வெளியில் என எல்லா இடங்களிலும் நிரவி நிற்கிறது சாதி வெறி.

பார்ப்பன எதிர்ப்பு, சாதி மறுப்பு என்றெல்லாம் பேசிய திராவிட இயக்கம் தமிழ் மக்களை கலசார ரீதியில் மாற்ற என்ன முயர்ச்சியை மேற்கொண்டது எனத் தெரியவில்லை. பார்ப்பனர்களிடம் மட்டுமே குவிந்து கிடந்த அதிகாரத்தை பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகளுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்த திராவிட இயக்கம் தலித் மக்களை வீதியில் விட்டு விட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்கிற அளவில் பேசப்பட்ட திராவிடக் கொள்கை அதற்கப்பால் எதையுமே செய்யாமல் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் தலித் மக்களுக்கு எதிராகச் செய்யும் வன்கொடுமைகளைத் தட்டிக் கேட்காததோடு அதை ஓட்டுச் சீட்டு அரசியலுக்காக ஊட்டி வளர்க்கவும் செய்து விட்டது. திராவிட இயக்கத்தின் போக்கில் அது பெரியாருக்குப் பின்னர் நீர்த்துப் போய் விட்ட நிலையில், தமிழ் தேசியவாதிகளை மட்டும் சாதி வெறி விஷயத்தில் யோக்கியமானவர்களாக நினைத்து விடாதீர்கள். தமிழ் ஈழம், தனித் தமிழ்நாடு, காவிரி, முல்லை இதைத் தாண்டி ஒரு தமிழன் இன்னொரு தமிழனின் வாயில் திணிக்கிற மலத்தை மறைமுகமாக அவர்களின் சாதி மனம் ஆதரிக்கிறதே தவிற தலித் மக்களுக்காக அவர்களின் சமத்துவ வாழ்வுரிமைக்காக போராடியதே இல்லை. இதை எழுதும் போது ஒரு செய்தி படித்தேன்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட மு.க. அழகிரி பரிந்துரைத்திருப்பதாகவும். சட்டமன்றத் தேர்தலுக்குள் எப்படியாவது மதுரை விமானநிலையத்துக்கு தேவரின் பெயரை வைத்து விட வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் ஆவலில் இருப்பதாகவும் அதற்கான மும்மூரமான வேலைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. விமானநிலையம் மட்டுமல்ல அங்கிருக்கும் உயர்நீதிமன்ற கிளைக்குக் கூட தேவர் கோர்ட் என்று பெயர் வைத்தாலும் ஆச்சரிப்பட ஒன்றும் இல்லை. பயமாய் இருக்கிறது. கொண்டாடப்படும் எந்தச் சாதியிலும் பிறக்காத மனிதர்கள் ஒழிந்து கொள்ளவோ தபிக்கவோ ஒரு இடமில்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் வருகிறது. இந்த பயத்தைத்தான் குஜராத்தில், காயர்லாஞ்சியில், மண்டைக்காட்டில், தாமிரபரணியில், வெண்மணியில், கொடியங்குளத்தில், உத்தபுரத்தில் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.இல்லை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த பயம்தான் இனியனை தூக்கில் தொங்கவிட்டது. என்ன செய்யப் போகிறோம்?

Leave a Reply

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..