Jul 30, 2010

ராஜபக்சேவுக்கு எப்படி தெரியும்?
Share
எங்க அப்பா ஒரு தீவிரமான கம்யூனிஸ்ட்.
உடனே மாவோயிஸ்டுனு நெனச்சிடக்கூடாது.
சி.பி.எம்.காரர்தான்.
வாடகை வீடுதான் என்றாலும்
எங்கே வீடுமாறிப்போனாலும்
வீட்டுமுன்னாடி ஒரு செவப்புகொடிய நட்டுவச்சுருவாரு.
"அம்மா" மேதினத்தப்போ அந்த கொடிக்குகீழ
அறுவா சுத்தியல் கோலம் போடும்.
தேர்தல் வந்தா போதும்
அப்பப்ப கட்சி வச்சிருக்கிற கூட்டணிக்கு தக
ரெட்டெலையோ உதயசூரியனோ வரைய
காவிச் சட்டியும்,
வெள்ளையடிக்கிற மட்டையுமா கெளம்பிடுவாரு அப்பா.
என்னயும் கூட்டிக்கிட்டுத்தான்.....
அப்பல்லாம் இப்ப மாதிரி
அங்க வரையக்கூடாது இங்க வரையக்கூடாதுன்னுல்லாம் தடையில்ல...
எடங் கெடச்சா எவன்சொவத்துலயும் வரையலாம்.
சில நேரத்துல கூட்டணி கட்சிக்காரங்களோடு சேந்தும் சின்னம் வரைவாங்க...
திடீர்னு திமுக அல்லது அதிமுக முக்கியஸ்தர் ரவுண்டுக்கு வருவார்.
எல்லாருக்கும் டீ வாங்கி தந்துட்டு...
அவங்க கட்சிக்காரங்களுக்கு மட்டும் செலவுக்கு பணம் கொடுப்பார்.
கம்யூனிஸ்ட் கட்சிக்காரவுங்களுக்கு டீ மட்டும் தான்.
பணமெல்லாம் கொடுக்கமாட்டாங்க.
கொடுத்தாலும் இவங்க வாங்க மாட்டாங்க.
எங்க அப்பா செத்தபிறகு நண்பன் அரிராமமூர்த்தியோடு நான் சின்னம் வரையப்போன காலம் வரைக்கும் இப்படித்தான்.
இப்போது எப்படின்னு எனக்கு தெரியல...
எனக்கு என்ன சந்தேகம்னா...
இந்த விசயம் எப்படி ராஜபக்சேவுக்கு தெரியும்றதுதான்.

Jul 25, 2010

முள்ளிவாய்க்கால் 2009
Share
முள்ளிவாய்க்கால் 2009

சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்
அல்லது
தற்கொலை செய்தவனின் மீது சுடப்பட்டிருக்கலாம்
தப்பியோடும் போது பின்னாலிருந்து கொன்றிருக்கலாம்
அன்றேல்
கூட இருந்தவன் சாகடிப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு
சரணடைந்தவன் மீது வன்மம் வெறியாய்க் கொன்டவனொருவன்
கண்ணிமைக்கும் பொழுதுக்குள்
தன் துவக்கின் வில்லை இழுத்திருக்கலாம்
கைதின் பின் முரண்டுபிடித்திருக்கவும்
அவனைச் சித்திரவதை செய்திருக்கவும்
பின் அடித்துத் கொல்லவும் வாய்ப்புண்டு
துப்பாக்கிக்குப் பதிலாக கோடரி அல்லது வேறு கூரிய கருவியால்
கபாலத்தைப் பிளந்திருக்கும் அநாகரிகம் எதிரியிடமும் உண்டு
தப்பியோட
அவன் சாயல் கொண்ட வேறொருவனின் பிணம் கூட
இவனாகச் சித்தரிக்கபட்டிருக்கலாம்
எல்லாவித சாத்தியப்பாடுகளோடும்
திரை விழுகிறது
மேடையில் கட்டியக்காரன் கும்மாளமிடுகிறான்
‘கூத்து முடிந்தது’
இரத்த வெடிலில் கிடந்து தகிக்கிறது கூத்துக்களரி
மகிழ்வா? துயரா? யாருக்கும் தெரியவில்லை
எல்லோர் விழிகளும் நீரால் வழிகிறது

இருள் இன்னும் கலையவில்லை


நன்றி:'எதுவரை'

Jul 20, 2010

டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்---- மு.குருமூர்த்தி
Share
தமிழன் எதையெதையோ இழந்தான். இழந்துகொண்டுமிருக்கிறான். ஏன் இழந்தான், எதற்காக இழந்தான், என்னென்ன சூழலில் இழப்புகள் ஏற்பட்டன என்பதையெல்லாம் மேடை போட்டு சோடா குடித்து பேசலாம். தமிழனே கைதட்டி விட்டு வேகமாக கலைந்து போய்விடுவான் அடுத்த இழப்பிற்கு தயாராவதற்கு.
இலவசக்கல்வியை இழந்தது, பள்ளிகளில் தமிழை ஓரங்கட்டியது, காவிரியை காணாமற்போகச் செய்தது, நகரங்களை கிராமங்களுக்குள் திணித்தது, கிராமங்களை நகரங்களுக்கு விரட்டியடித்தது, ஆற்று மணலைப் பொன்னாக்கியது, நிலத்து மண்ணைப் பாழாக்கியது, கிராமத்து தொழில்களை நசுக்கியெறிந்தது, இதெல்லாம் அற்பமான இழப்புகள்.

இதற்கு ஈடாக தமிழன் இன்று பெற்றிருப்பது ஏராளம். குடும்பத்தை சிதைக்கும் கதைகள் நம்மூர் தொலைக்காட்சிகளில் செங்கோல் செலுத்துகின்றன. நமது பெண்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளும் இடைவேளைகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மானைப் போலவும் மயிலைப் போலவும்.
“படிக்கிறவனை நீங்களே படிக்க வைத்துக்கொள்ளுங்கள் குடிக்கிறவனை குடிக்கவைக்கிற வேலை எனக்கிருக்கிறது” என்று மார்தட்டும் அரசுகள்.

அரசாங்க ஆஸ்பத்திரியில் உயிரை இழக்க விரும்பாதவனை வாரியணைக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் சிண்டிகேட் மருத்துவமனைகளும். .டிஸ்சார்ஜ் ஆகும்போது ஒருஏக்கர் நிலத்தை விற்றால் தான் டவுன் பஸ்ஸுக்கு சில்லரை மீதமிருக்கும் உத்தரவாதம்.

அந்த வரிசையில் ஒரு புரட்சிவரவு “டிஜிட்டல் படுதாக்கள்”. தலைவனையும் தலைவியையும் விளம்பரப்படுத்தும் மோகம். அந்த விளம்பரத்தின் நிழலில் தானும் அறிமுகமாகும் வேகம். இன்றைய டிஜிட்டல் பேனர்கள் தமிழகத்தின் புதியவரவு. மரபு ஓவியர்களின் தொழிலை வேருடன் பிடுங்கி எறிந்த தொழில்நுட்பம் இன்று தமிழ்நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் கைகால்களைப் பரப்பிக்கொண்டு ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறது.
நின்றுகொண்டும், நடந்து கொண்டும், கைகூப்பிக் கொண்டும், தலைசாய்த்து தோழருடன் பேசிக்கொண்டும், முற்றிப்போன சினிமா டைரக்டர்களின் கற்பனையில் கூட எட்டியிராத போஸ்களில், தமிழ்நாட்டின் தலைநரைக்காத மூத்தகுடிமக்கள் பளபளப்பான அந்த படுதாக்களில் குடியிருப்பார்கள். கையில் ஒரு துண்டு மடித்து வைத்திருப்பார். அல்லது செல்போன் வைத்திருப்பார். செல்போன் சும்மா இருந்தால் செல்போனுக்கு மரியாதையில்லை என்பதற்காக செல்போனை சொறிந்து கொண்டிருப்பார். நட்ட நடுரோட்டில் சிரித்துக்கொண்டு நிற்பார் அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். படுதாவிற்கு காசுகொடுத்த தோழரின் தலை கால்மாட்டில் வேட்டியோரமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்.

எந்த ஒரு கட்சிப்புள்ளியும் படுத்திருக்கிற கோணத்தில் டிஜிட்டல் படுதா யாரும் இன்னும் வைக்கவில்லை. அப்படியொரு படுதா வைத்தால் பிரமுகர் அரசியலில் படுத்துவிடுவார் என்கிற சென்டிமெண்ட் ஆகக்கூட இருக்கலாம். கட்சியில் முக்கியமான ஒரு புள்ளி தன்னுடைய ஊருக்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்பது என்ற பெயரில் டிஜிட்டல் படுதாக்களை வைப்பவர் யாராக இருக்கும்? இன்றைக்கு கட்சியில் தனக்கு இருக்கும் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமா? அடுத்த தேர்தலில் தனக்கு சீட்வேண்டும் என்று அச்சாரம் போடவேண்டுமா? கட்சியில் தான் இன்னாருடைய ஆதரவாளர் என்பதை தலைமைக்கு எடுத்துக்கூறவேண்டுமா?

தனக்குப்பின்னால் இவரெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடவேண்டுமா? இது தன்னுடைய ஏரியா என்பதை கட்சிக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கும் அறிவிக்கவேண்டுமா? தனக்குக்கிடைத்த காண்ட்ராக்ட்டுக்கும் சுருட்டிய பெரும்தொகைக்கும் நன்றி கூறவேண்டுமா? அடுத்துவரப்போகிற பெரிய டெண்டர் தனக்கு சாதகமாக இருக்கவேண்டுமா? கத்தியின்றி ரத்தமின்றி காரியம் முடிக்கும் ஆயுதம்தான் டிஜிட்டல் படுதாக்கள்.

இந்த டிஜிட்டல் படுதாக்களில் கட்சிப்புள்ளிகளை எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என்பதைப்பார்த்தால் அந்த பிரமுகருக்கே முகம் சிவந்துபோகும் நாணத்தால். “இந்நாட்டு இங்கர்சாலே.....சேகுவாராவே........உலகத்து நாயகனே அல்லது நாயகியே........வீரத்தின் உருவே.....எங்கள் குல விளக்கே.......உலகத்தின் பெரியாரே.....திருக்குறளே.......கண்ணின் மணியே.........மணியின் ஒளியே.....”

இதெல்லாம் “டிஜிட்டல் படுதாக்களில் பேத்தல்கள்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உதவுகிறதலைப்புகள். கட்சிப்புள்ளிகளை விலங்குகளுக்கு ஒப்பிட்டு வரவேற்கும் டிஜிட்டல் படுதாக்களுக்கும் குறைவில்லை. சிங்கம், புலி, சிறுத்தை, களிறு, காளை, அரிமா, வேழம், கவரிமான், புள்ளிமான், கலைமான் இவற்றோடெல்லாம் ஒப்பிட்டு டிஜிட்டல் படுதாக்கள் வைத்தாயிற்று. என்ன காரணத்தினாலோ நரியோடு யாரும் ஒப்பிடுவது இல்லை.

ஆரம்பகாலத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் படுதாக்கள் காந்தி, நேரு, அம்பேத்கர் படங்களில் வரிசைகட்டம். அப்புறம் கற்பனை தமிழ்நாட்டுக்குள் நுழைந்து விடும். பெரியாரில் தொடங்கி காமராசர், அண்ணா இவர்களின் இதயத்திற்குள் பிரமுகர் சிரித்துக் கொண்டிருப்பார். இப்போதெல்லாம் பழையதலைவர்கள் மக்களின் நினைவில் இறந்துபோய்விட்டதால் அவர்களாகவே இப்போது பரணில் ஏறிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பிரமுகரின் படம்தான் பிரதானம்.

பாவ்லோவ் என்ற ரஷ்ய நாட்டு விஞ்ஞானி அவருடைய நாய்க்கு சோறு வைக்கும்போதெல்லாம் ஒரு மணியை அடித்து ஓசைபடுத்தியபிறகு தான் சோறு வைப்பாராம். சில மாதங்கள் கழிந்ததும் மணி மட்டும் அடிப்பாராம். சாப்பாட்டுத்தட்டை வைக்கமாட்டாராம். மணி ஓசை கேட்டவுடனேயே நாய் சோற்றை நினைத்துக்கொண்டு நாக்கை தொங்கப்போடுமாம். நாய், மணிஓசை, சோற்றுத்தட்டு இதெல்லாம் யார்யாரென்று விரித்துரைக்க வேண்டியதில்லை.

டிஜிட்டல் படுதாக்களின் அதிர்வலைகள் பெருநகரங்களின் தொடங்கி, சிறுநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் என்று அதிர்ச்சி அலைகளாக பரவிவருவதுதான் இன்றைய ரசனைக்குரிய செய்தி. டிஜிட்டல் படுதாக்களைத் தயாரிக்கும் தொழிலகங்கள் சிற்றூர்களில்கூட ஆல்போல்தழைத்து அருகுபோல் வேரூன்றி நிற்கின்றன. வேலை கிடைக்காத படித்த ஏழை இளைஞர் பட்டாளம் நாடி நரம்புகளைத் துளைக்கும் இரசாயனப் பொருள்களின் வாசனைக்கு நடுவே நாள்முழுவதும் பணியாற்றிவருவது கொடுமையிலும் கொடுமை.

இந்த படுதாக்கள் பாலிவினைல் குளேரைடு என்ற இரசாயனப் பொருட்களினால் ஆன பிவிசி வால்பேப்பர்களில் அச்சடிக்கப்படுகின்றன. பல்வேறு இரசாயனங்கள் சேர்க்கப்படாமல் பிவிசியை பயன்படுத்தமுடியாது. காட்மியம், பாதரசம், ஈயம், தாலேட்டுகள், டையாக்ஸின்கள் என்று மேலைநாடுகள் வெறுத்து ஒதுக்கத்தொடங்கியுள்ள இரசாயனங்களை நாம் வாரியணைக்கத் துடிக்கிறோம் இந்த படுதாக்களின் வடிவத்தில். இந்த படுதாக்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் புற்றுநோயின் பங்காளிகள். மலட்டுத்தன்மையின் சம்பந்திகள்.

“எங்க மாமாவுக்கு கல்யாணம்......வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.” “அஞ்சாத சிங்கம் அம்மாக்கண்ணு வீட்டுத்திருமணத்திற்கு வருபவர்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.” என்பது போன்ற டிஜிட்டல் படுதாக்கள் கல்யாண மண்டபங்களின் வீதியின் இருபுறமும் காணப்படுவது இன்றைய சாதாரணம். கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு, மொய்விருந்து, பணிஓய்வு, வெளிநாட்டுப்பயணம், வெளிநாட்டிலிருந்து வெற்றிகரமாக திரும்புதல் என்று டிஜிட்டல் படுதாக்களின் பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது.

இந்த படுதாக்களின் வேலை முடிந்தபிறகு அதனுடைய மிச்ச சொச்ச ஆயுள் எப்படி கழிகிறது என்பதுதான் இந்த கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கமம். புற்றுநோயாலும் மலட்டுத்தன்மையாலும் பாதிக்கப்படும் அபாயம் இந்தத்தொழிலில் இருப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே டிஜிட்டல் படுதாக்களை தயார்செய்யும் தொழிலில் இருப்பவர்களை ஆபத்தான தொழில் செய்பவர்களாகத்தான் கருதவேண்டும். இந்த படுதாக்கள் நகராட்சியின் தலைவலிக்கு காரணமான பிளாஸ்டிக் குப்பைகளுக்கும், மருத்துவமனைக் கழிவுகளுக்கும் சமமானவை.

ஒரு கிராமத்திற்குள் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து பார்த்தால் பத்து அல்லது இருபது ஓய்வுபெற்ற டிஜிட்டல் படுதாக்கள் வீடுகளின் சுவர்களில் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதை இன்று பார்க்கலாம். காலம் நீளும்போது நிச்சயமாக இந்த எண்ணிக்கை நீளும். அவற்றை என்ன செய்வது என்பது வீட்டுக்காரர்களுக்கே தெரியவில்லை. காலப்போக்கில் அவை மழைச்சாரலை மறைக்கும் படுதாக்களாக மாறலாம். மாட்டுக் கொட்டகைக்கு கூரையாகலாம். ஏழைக்குடிசைக்கு சுவராகலாம். அரிசியும் பருப்பும் காயவைக்கும் படுதாவாக உருவெடுக்கலாம். டிஜிட்டல் படுதாக்களில் பயன்படுத்தப்படும் இரசாயனப்பொருள்கள் ஆபத்தானவை. முன்னேறிய நாடுகள் அவற்றை துரத்தியடிக்க முயற்சி செய்து கொண்டிக்கின்றன.

வந்தாரையெல்லாம் தமிழகமும் தமிழனும் வாழவைக்கலாம். அதில் தவறில்லை. டிஜிட்டல் படுதாக்கள் போன்ற நச்சுப் பொருட்களை வாழவைப்பது இமாலயத் தவறு. எதிர்கால சந்ததி இல்லாமல் போகும் என்பதுதான் அறிவியல் உலகம் தரும் எச்சரிக்கை. தமிழ்நாடு அரசு பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து டிஜிட்டல் படுதாக்களுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பது ஆறுதலான செய்தி.

தற்போது ஒரு சதுர அடி டிஜிட்டல் படுதா தயாரித்து தருவதற்கு ஒரு சதுர அடிக்கு எட்டு ரூபாய் வாங்குவதாகத் தெரிகிறது. ஒரு பிரமுகரின் ஆளுயர படுதா தயாரிக்க எட்டடிக்கு இரண்டரை அடி என்ற அளவில் நூற்று அறுபது ரூபாய் செலவாகும். ஆள் கூலி எல்லாம் சேர்த்து இருநூறு ரூபாய் என்று கொண்டால்கூட வீதியெங்கும் ஐம்பது படுதா வைக்கும் கட்சிக்காரர் பத்தாயிரம் ரூபாய் செலவழிக்கவேண்டியிருக்கும். ஏதோ ஒரு காண்ட்ராக்டில் லட்சரூபாய் சம்பாதித்த கட்சிக்காரருக்கு பத்தாயிரம் சாதாரண தொகை. அரசாங்கம் டிஜிட்டல் படுதாக்களின் மீது நூறு சதவீதம் வரிவிதிப்பை ஏற்படுத்தினால் அரசின் பிடி இறுகும்.

இதனால் வருத்தப்படப்போவது டிஜிட்டல் படுதாக்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சியல்ல. ஜில்லென்று சிரித்துக்கொண்டிருக்கும் சீமான்கள்தான்.

In this note

No one.

Jul 18, 2010

ஹிட்லர் பட்சே
Share
Thursday, June 3, 2010 at 11:49am
கைகால்கள் ஒரு குழியில்
தலைகள் ஒரு குழியில்
முண்டங்கள் ஒரு குழியில்
முளைவிட்ட பிஞ்சுகள் ஒரு குழியில்
கர்ப்பவதிகள் ஒரு குழியில்
வேங்கைகள் ஒரு குழியில்
நாம் மானமிழந்த ஒரு குழியில்
ஹிட்லர் அந்தத் தீவில்தான்
திரிகின்றானாம்
பசியடங்கா மிருகம்போல -அய்யப்ப மாதவன்
பசுமை வேட்டை
Share
Saturday, July 10, 2010 at 7:40am
(மேற்கு வங்க மெதினியூர் மாவட்டத்தில்16.6.2010 அன்று காவல் படையினர் நடத்திய மோதல் படுகொலையில் கொல்லப்பட்ட பெண் போராளிகளில் ஒருவரை காவல் படையினர் தூக்கிச் செல்கின்றனர்.)

ஒற்றைக்கண்ணீர்த் துளியொன்று
வீழ்ந்து
பரவுகின்றது வெயிலெனப் பரவிய பூமியின் மேல்

உயிர்களைக் கடந்து
சுட்டுச்சாய்த்த சடலங்களை
குப்பைகளைப் பொறுக்குவதைப் போன்றே
பொறுக்கி இருக்கவேண்டும் அவர்கள்
தாகத்தின் தீராத வலியில் துடித்த
அவளுயிர்ப்பழத்தை கால்களில் நசுக்கியிருக்கலாம்
மூச்சுக்காற்றின் கடைசி சுவாசத்தி
எச்சில் துப்பி அடைத்திருக்கலாம்
வேட்டையின் வெறியடக்க
அவளின் சுரப்பிகளைப் பொசுக்கியிருக்கலாம்
ரத்தத்தில் புதைந்த அவள் கண்களில்
புதைந்த வானம் குருதிச் சிவப்பாகி யிருக்கலாம்

அதிகாரப் பசியின் கோரம் உயிர்களைத் தின்ன
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுகின்றது
வறுமை
வாழ்வின்மை
சுரண்டல்
இவற்றுக்கெதிரான குரலே
மரணத்திற்கானதாகி விடுகின்றது

ஊழலின் அரசியலை சனநாயகமாக்குவதும்
மக்களின் உயிர்களை மயிரென மதிப்பதும்
மக்களாட்சியெனின்
பசுமை வேட்டை என்பது வேறென்ன
மக்களைக் கொல்வதன்றி.

---

யாழன் ஆதி
தலித் முரசு சூன் 2010

Jul 7, 2010

ஒரு கம்யுனிஸ்டின் கதை

ஜூல்பிகர் அலி பூட்டோ
நகர கம்யுனிஸ்டின் பொறுப்பில் இருந்தான்
அவனொரு நடைபாதை வியாபாரி
செகுவேராவையோ
மாவோவையோ
மூலதனத்தையோ பற்றி அவன் அறிந்திருக்கவில்லை
என்பதை காட்டிலும்
இவற்றின் இருப்பு குறித்தே அவனுக்கு தெரியாது
கான்ஸ்டபில் மருதாச்சலத்தின் மிரட்டலையும்
வாராந்திரம் தண்டமழும் மாமூலையும்
சரிப்படுத்தவே அவன் கம்யுனிஸ்ட் ஆனான்
பிரச்சனைகள் தீர்ந்துவிட்ட பிறகும்
அவன் கம்யுனிஸ்ட்ட்டாகவே அறியப்பட்டான்
நான்கைந்து ஆர்ப்பாட்டங்களில்
நரம்பு புடைக்ககத்தி
நகரப்போறுப்பை அடைந்தான்
ஆனாலும் அவனுக்கு
இன்குலாப் ஜிந்தாபாத் என்பதற்கு மட்டும்
அர்த்தம் தெரியும்
அதுவும் பழைய மருதாசலம்
யதேட்சையாய் கேட்கப்போக
பக்கத்திலிருந்த தோழரிடம்
கேட்டு ச்சொன்னபோதுதான்


-சிநேகிதன்
(என்சௌண்டேர் செய்யப்படுவதற்கு சற்று முன்பு தேநீர் குடித்துக்கொண்டிருந்தேன் )
....... கவிதை தொகுப்பிலிருந்து

புதிய தடம் வாசகர்களை இங்கே வரவேற்கிறேன்

Jul 6, 2010

கவிதை என்பது....

கவிதை என்பது மொழியின் வரம்புகளை தாண்டிடும் ஒரு முயற்சி தவிரவேறொன்றுமில்லை. கவிஞன் என்பவன் சுவர் மீது ஏறுபவன். கடந்த காலத்தின் தலைசிறந்த படைப்புகளால் நிர்மாணிக்கப்பட்ட பெர்லின் சுவரினை எப்போதும் தாண்டமுயல்பவன். கவிதை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் மற்றும் மானுடரின்தோற்ருப்போவதும் தீரம் மிக்கதுமான முயற்சிகளை அடையாளப்படு.த்த வேண்டும்.
-யாங் லியான்

Jul 5, 2010

இலங்கை கூட்டுக் கொலை செய்யும் அரசு, இந்தியா மெல்லக் கொல்லும் அரசு - சென்னையில் அருந்ததிராய்


ழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் காட்டு வேட்டைப் போரைக் கண்டித்து சென்னையில் பிரமாண்டக் கூட்டம் நடந்தது. மூன்றாயிரம் பேர் வரைக் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், டில்லிப் பேராசிரியர் கீலானி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு, ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழத்தைச் சார்ந்த அமித் பாதுரி. பேராசிரியர் சாய்பாபா, உள்ளிட்டோ கலந்து கொண்டு பழங்குடி மக்கள் மீதான போருக்கு எதிராக தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர். பழங்குடிகள், மாவோயிஸ்டுகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவதற்கான புறச்சூழலை ஊடகங்களின் உதவியுடன் உருவாக்கிக் கொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில் நடந்த கூட்டத்தின் பதிவுகள் இங்கே பகிரப்படுகிறது..முதலில் துவக்க உரையாற்றிய தோழர் விடுதலை ராஜேந்திரன்,

” ஒரு மாபெரும் மனிதப் பேரழிவை சந்தித்த தேசீய இனத்தைச் சார்ந்தவர்கள் நாம் என்கிற வகையில் மக்கள் விடுதலைக்காக போராடும் மாவோயிஸ்டுகளை ஆதரிக்க வேண்டும். ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் சக்திகள் தண்டகாரண்யாவில் போராடும் பழங்குடி மக்கள் போராட்டங்களோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.பொதுவாக போராடுகிறவர்களைப் பார்த்து காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள். இவர்கள் தேச விரோதிகள் என்று யார் தேச விரோதி. உள்நாட்டு மக்களின் சொந்தக் குடிகளின் வளங்களை எடுத்து பன்னாட்டு நிறுவங்களுக்கு தாரை வார்க்கு சிதம்பரமும், மன்மோகனும்தான் தேச விரோதிகளே தவிற மண்ணைக் காக்க போராடுகிற மாவோயிஸ்டுகளும் பழங்குடிகளுமல்ல. அவர்கள் தேச பக்தர்கள். என்ன விதமான ஒடுக்குமுறைகளைச் சந்தித்தாலும் நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும்”" என்றார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன்.

தியாகு:
”நம்முடைய சொந்த சகோதர்களான ஈழ மக்கள் சந்தித்த அழிவையே இப்போது பழங்குடி மக்களும் சந்திக்கிறார்கள். இந்த மக்களை எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் என்றும் குடிமக்கள் என்றும் சொல்கிற அரசுகளோ மக்களைக் கொன்றொழிக்கிறது. இவர்களைத்தான் பாரத் தாய் என்று சொன்னார்கள். உண்மையில் பாரத்தாய் அல்ல பேய். பிள்ளைக்குப் பசித்தால் தாய் அழுவாள். பிள்ளைக்கு ஒரு ஆபத்து என்றால் தாய் பதறிப் போவாள். ஆனால் பாரத்தாயோ அழுத பிள்ளைக்கு விஷம் கொடுத்தாள். உயிர்காப்பாற்று என்று கதறிய குழந்தையை கொடூரமாகக் கொன்றாள். இது ஈழத்தில் நடந்தது. காஷ்மீரில் நடக்கிறது. தண்டகாரண்யாவில் நடக்கிறது. நாம் அழுகிற குழந்தைகளின் பக்கம் நிற்கிறோம். இந்தப் பேயின் கரங்களை எங்கள் காஷ்மீர் குழந்தைகள் வெட்டி வீசுவார்கள். போர் வெறி பிடித்த இந்தியப் பேயை எமது தண்டகாரண்யா போராளிகள் துண்டாடுவார்கள். எங்கள் மக்களை அழித்த இந்தியப் பேயை எமது ஈழத்துக் குழந்தைகள் கழுத்தை அறுத்துக் கொல்வார்கள்”" என்று பேசினார்.

பேராசிரியர் கீலானி :
“சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது அப்போதெல்லாம் இவர்கள் வளர்ச்சி பற்றி பேசவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு வந்து வளங்களை கொள்ளையடித்து அவர்களிடம் கொடுத்து விட்டு வளர்ச்சி பற்றிப் பேசுகிறார்கள். பெண்களை பாலியல் வன்முறை செய்வதும், கடத்துவதும், கொலை செய்வதும் கொள்ளையடிப்பதும்தான் வளர்ச்சியா? இந்த நாட்டின் பெரும்பலான மக்கள் ஏழைகள் அவர்கள் ஊட்ட்ச்சத்து மிக்க உணவு இல்லாமல் மடிந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் டில்லியில் தீர்ப்பாயம் ஒன்றுக்கு பழங்குடி மக்களை அழைத்து வந்தார்கள். அவர்களிடம் இந்திய உயர்பீடத்தினர் கேட்டார்கள். “மாவோயிஸ்டுகள் ஏன் பள்ளிகளையும் மருத்துவனமைகளையும் தகர்க்கிறார்கள். என்று?” அதற்கு பழங்குடி மக்கள் சொன்னார்கள். அது பள்ளியோ மருத்துவமனையோ அல்ல பள்ளி, மருத்துவமனையை ஆக்ரமித்து அவர்கள் இராணுவ முகாமாக்கி விடுகிறார்கள். ஆகவே மாவோயிஸ்டுகள் அல்ல நாங்கள்தான் அதைத் தகர்த்தோம் என்று. ஆக மக்களை ஆயுதங்களை நோக்கி நகர்த்துவதுதான் இந்திய அரசின் வேலையாக இருக்கிறது. அண்மையில் அருந்ததிராய் சொன்னது போல அங்கே தொண்ணூறு சதவீத பழங்குடிகளும் மாவோயிஸ்டுகள் அல்ல ஆனால் 99% மாவோயிஸ்டுகளும் பழங்குடிகளே என்றார். ஆமாம் அப்படித்தான் நிலைமை இருக்கிறது. போராடும் எல்லா இடங்களுக்கும் இது பொறுந்தும் இல்லையா? காஷ்மீர் சுயாட்சிக்காக நீண்ட காலம் அஹிம்சை வழியில் அமைதி வழியில் போராடினார்கள். பின்னர் வந்த இளைஞர்கள் ஆயுத மேந்தி வீட்டை விட்டு வெளியேறி ஆயுதமேந்திப் போராடுகிறார்கள்.

நீண்ட காலம் நீதி மறுக்கப்பட்ட நிலையில் காஷ்மீரிகளின் சுயாட்சிக் கோரிக்கை வன்முறை வடிவம் பெற்றது. ஒருவன் எப்போது ஆயுதமேந்துகிறானோ அப்போதே அவன் தன் உயிர் பறிக்கப்படுவது பற்றி கவலைப்படுவதில்லை. அதுதான் காஷ்மீரிலும், தண்டகாரண்யாவிலும் நடக்கிறது. அமைதி என்பது நீதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோரது விருப்பமும் உரிமை கேட்டுப் போராடும் மக்களுக்கு நியாயமான தீர்வுகளைத் தேடுவதன் மூலமே பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும்” என்றார் பேராசியர் கீலானி.

அருந்ததிராய்
: ” பழங்குடி மக்கள் மீதான போருக்கு எதிரான இந்தக் கூட்டத்திற்கு இவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் ஆட்சிக்கு வந்ததும் பன்னாட்டு நிறுவனங்களான வேதாந்தா, எஸ்ஸார் நிறுவனங்களுக்கு மாவோயிஸ்டுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்றால் ஆந்திராவில் நக்சல்பாரிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

பங்குச் சந்தையில் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.நிறுவனங்களின் கைகளில் நிலங்கள் சென்றது மக்கள் சாவை நோக்கித் துரத்தப்பட்டனர். சுமார் 550 கிராமங்களில் இருந்து மக்கள் துரத்தப்பட்டனர் அந்த நிலங்களை இந்திய அரசு அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து விட்டது. இதுதான் அம்மக்களின் அமைதியைக் குலைத்தது. தங்களின் பூர்வீக நிலங்களுக்காக அவர்கள் போராடுகிறார்கள்.
அவர்களை ஆதரிக்கிற என்னையும் மாவோயிஸ்டுகள் என்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன. நான் சொன்னதை திரித்து வெளியிடுகிறார்கள். எங்களை நீங்கள் ஆதரிக்க வில்லை என்றால் நீங்கள் அவர்களின் பக்கம் என்று அமெரிக்காவின் குரலை இங்கே சொல்கிறார்கள். நான் இப்போதும் சொல்கிறேன் மக்கள் கொலையை நான் ஆதரிக்கவில்லை.

ஆனால் வில்லும் அம்பும் வைத்திருக்கிற மக்களை கனரக ஆயுதங்களைக் கொண்டுக் கொல்கிறீர்களே நான் எப்படி உங்களின் பக்கம் நிற்க முடியும்? நான் கைது செய்யப்படுவதைப் பற்றி அஞ்ச வில்லை. நியாத்துக்காக போராடுகிறேன் நான். 2 லிருந்து மூன்று கோடி மக்கள் வரை காடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் என்ன செய்வார்கள். நான் கூட முன்னர் பேசும் போது சொன்னேன் நான் உங்களுடன் இருக்கிறேன் உங்களைக் கொல்வதை இனி அனுமதிக்க மாட்டேன் என்றேன். ஆனால் என்ன நடந்தது அன்றாடம் கொல்கிறார்கள். நம்மால் என்ன செய்ய முடிந்தது. அவர்கள் கொன்று கொண்டே இருக்கிறார்கள். காங்கிரஸோ, பிஜேபியோ, அதிமுகவோ, திமுகவோ உங்களை ஆள்வதாக நீங்கள் நினைக்காதீர்கள். டாடாவும், எஸ்ஸாரும், வேதாந்தாவும்தான் உங்களை ஆள்கிறார்கள் இந்திய பெரு நிறுவனங்கள்தான் இனி ஈழ மக்களையும் ஆட்சி செய்வார்கள்.

இவர்களின் வர்த்தக நலனுக்காக ஈழ மக்கள் கொல்லப்பட்டார்கள். வெளிப்படையான போர் ஒன்றைத் தொடுத்து பெருந்தொகையான மக்களைக் கொன்றொழித்தது இலங்கை அரசு. அந்த இலங்கையை இந்தியா ஆதரிக்கிறது. கூட்டம் கூட்டமாக மக்களை வெகு வேகமாகக் கூட்டுக் கொலை செய்தது இலங்கை அரசு. ஆனால் இந்தியா அப்படிச் செய்யாது மக்களைக் கொல்ல இந்தியா தந்திரத்தைக் கையாள்கிறது. இலங்கை அரசு நடத்திய படுகொலையில் இருந்து படிப்பினையைப் பெற்று அதை வேறு வடிவத்தில் தண்டகாரண்யாவில் செயல்படுத்துகிறது இந்திய அரசு. இலங்கையில் நடந்த போரை தமிழக அரசியல்வாதிகள் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாகவோ, ஒற்றுமையாகவோ இல்லாததால் இவர்கள் அதைச் செய்யவில்லை.

இவர்கள் மக்களையே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணம் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டம் ஆக்கியதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்தியாவுக்கு வந்தது. தாராளமயக் கொள்கையை அறிமுகப்படுத்தி மக்கள் நிலங்களை கொள்ளையடிக்கத் துவங்கிய பின் மாவோயிட் தீவிரவாதம் வளர்ந்திருக்கிறது. இதற்கு இவர்கள்தான் பொறுப்பு” என்று பேசினார்.